அரசு விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் 4 பேருக்கு வாந்தி


அரசு விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் 4 பேருக்கு வாந்தி
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்குவளையில் உள்ள அரசு விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் 4 பேர் வாந்தியால் பாதிக்கப்பட்டனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

திருக்குவளையில் உள்ள அரசு விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் 4 பேர் வாந்தியால் பாதிக்கப்பட்டனர்.

அரசு விடுதி

நாகை மாவட்டம் திருக்குளையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் நல விடுதியில் மாணவிகள் 50 பேர் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு நேற்று காலை உணவாக மாணவிகளுக்கு இட்லி- சாம்பார் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்டு விட்டு மாணவிகள் பள்ளிக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் தலைஞாயிறு சந்தைவெளி பகுதியை சேர்ந்த ரமேஷ் மகள் பூஜா (12-ம் வகுப்பு), பரப்பனூரை சேர்ந்த கனகராஜ் மகள் லலிதா (11-ம் வகுப்பு), கச்சனத்தை சேர்ந்த ரமேஷ் மகள் தீபா (11-ம் வகுப்பு), வெண்மனச்சேரியை சேர்ந்த கண்ணதாசன் மகள் கனிஷ்கா (8-ம்வகுப்பு) ஆகிய 4 மாணவிகளும் காலை 11 மணி அளவில் பள்ளியில் இருந்தனர். அப்போது அவர்கள் திடீரென வாந்தி எடுத்தனர். மேலும் 11 மாணவிகளுக்கு வாந்திக்கான அறிகுறி ஏற்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் சிங்காரவேல் மற்றும் ஆசிரியர்கள் வாந்தியால் பாதிக்கப்பட்ட மாணவிகள் 4 பேர் உள்பட 15 பேரையும் திருக்குவளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை முடிந்ததும் நேற்று மாலை மாணவிகள் அனைவரும் விடுதிக்கு திரும்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூண்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், ஆய்வாளர்கள் ராமமூர்த்தி, சரவணராஜ், சுகாதார செவிலியர் இந்திரா ஆகியோர் விடுதிக்கு சென்று உணவு பொருட்களை ஆய்வு செய்தனர். இதுகுறித்து திருக்குவளை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story