4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தஈமக்கல் கண்டுபிடிப்பு
வேடசந்தூர் அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈமக்கல்லை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஈமக்கல் கண்டுபிடிப்பு
வேடசந்தூர் அருகே ஆசாரிப்புதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே மலை குன்று ஒன்று உள்ளது. இந்தக் குன்றின் மீது பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட மல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த மலைக்குன்று பகுதியில் திண்டுக்கல்லை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் விஸ்வநாத தாஸ், சந்திரசேகர் மற்றும் குழுவினர்கள் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது மலைக்குன்றின் அடிவாரத்தில் நுழைந்தான் பாறை என்னும் இடத்தில் கற்காலத்தை சேர்ந்த ஈமக்கல் திட்டு ஒன்றை கண்டுபிடித்தனர். அது சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஈமக்கல்லின் மையப்பகுதியில் சிவலிங்கமும், நந்தி உருவமும் பொறிக்கப்பட்டு இருந்தது. இதனை அப்பகுதி மக்கள் காலங்காலமாக வழிபட்டு வருவது தெரியவந்தது.
அந்த ஈமக்கல் அருகே உள்ள பகுதியில் பலகை கல் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5 அடி நீளம் கொண்டதாகவும், கல்லில் குறுக்கும், நெடுக்குமாக 7-க்கு 7 என்ற கட்டங்கள் சதுரமாகவும் செதுக்கப்பட்டு இருந்தது. இந்த குறியீடு ஒவ்வொரு மனிதனுக்கும் ஏழு பிறவிகள் உள்ளதை குறிக்கின்றது. மேலும் அங்கிருந்த பாறையின் மேல் பகுதியில் சூரியன், சந்திரன் உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது. இவை 300 ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்டு இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறினர்.
கல் தூண்கள்
இதைத்தொடர்ந்து அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மல்லீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கிணற்றின் அருகே சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 நீதி பரிபாலன கல் தூண்களை கண்டுபிடித்தனர்.
அதன் அருகே உள்ள பாறைகளில் தமிழில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருந்தது. பாறையின் அருகே உள்ள ஓடையில் கற்கால கல் ஆயுதங்கள் சில கிடைத்தது. மேலும் இரும்பை உருக்கிய பாறை கற்கள் இருந்தது.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், தமிழ் எழுத்துக்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அந்த எழுத்துகளையும், அங்குள்ள கோவில் சிற்பங்களையும் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த பகுதியில் உள்ள ஈமக்கல்திட்டை கற்காலத்திலிருந்து பெருங்கற்காலம் சங்க காலம் வரை தொல்லியல் சின்னமாக உள்ளது என்றனர்.