வைக்கோலுக்குள் மறைத்து வைத்துமினிலாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


வைக்கோலுக்குள் மறைத்து வைத்துமினிலாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 21 May 2023 12:45 AM IST (Updated: 21 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே வைக்கோல் ஏற்றிய மினிலாரியில் மறைத்து கடத்திய 4 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே வைக்கோல் ஏற்றிய மினிலாரியில் மறைத்து கடத்திய 4 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நூதன முறையில் கடத்தல்

குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக ரேஷன் அரிசி கொடுக்கப்படுகிறது. இதனை குறைந்த விலைக்கு வாங்கும் கும்பல் கேரளாவுக்கு கடத்தி அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.

இதனை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் கடத்தல் கும்பல் நூதன முறையில் மீன்லாரிகளுக்கு இடையே வைத்தும், கார் உள்ளிட்ட வாகனங்களில் மறைத்து வைத்தும் ரேஷன் அரிசியை கடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று காலையில் இரவிபுதூர்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வைக்கோல் ஏற்றிக் கொண்டு மினிலாரி சென்றது.

4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

இதனை கவனித்த அதிகாரிகள் அதனை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால் மினிலாரியை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக இயக்கினார்.

உடனே அதிகாரிகள் காரில் ஏறி துரத்தி சென்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தில் இறுதியாக மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வைத்து மினிலாரியை அதிகாரிகள் மடக்கினர். அப்போது மினிலாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பிறகு அதிகாரிகள் மினிலாரியில் ஏற்றிய வைக்கோலை இறக்கி பார்த்த போது மூடை, மூடையாக ரேஷன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் வைக்கோலுக்கு இடையே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்றது அம்பலமானது.

பின்னர் மினிலாரி, 4 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் ரேஷன் அரிசியை உடையார்விளை குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நூதன முறையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற கும்பல் யார்? தப்பி ஓடிய டிரைவர் யார்? என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story