நான்கு வழிச்சாலை பணி தீவிரம்
நான்கு வழிச்சாலை பணி தீவிரம்
போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளின் மும்முரமாக நடந்து வருகிறது.
நான்கு வழிச்சாலை
ஒரு நாட்டின் வளர்ச்சியில் தரமான சாலைகளின் பங்கு பெருமளவு உள்ளது. மேம்படுத்தப்பட்ட விரைவுச் சாலைகள் அமைப்பதன் மூலம் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கான செலவு பெருமளவு குறைகிறது. நெடுஞ்சாலைக் கட்டமைப்பில் தற்போது நிலவி வரும் இடைவெளிகள், அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவைகள் ஆகியவற்றால் இந்தியாவில் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டிய துறையாக நெடுஞ்சாலைத்துறை உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை எளிதாகும் வகையில் புதிய கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் பாரத் மாலா திட்டம் தொடங்கப்பட்டு நாடு முழுவதும் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாரத் மாலா பரியோஜனா திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கென நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மிக உயரமாக மண் கொட்டப்பட்டு, அதன் மீது தார் சாலை அமைக்கும் பணிகள் பெரும்பாலும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.தேவையான இடங்களில் உயர் மட்ட பாலங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உறுதித்தன்மை
இந்தநிலையில் நான்கு வழிச்சாலை பணிகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நான்கு வழிச்சாலையின் அவசியத்தை உணர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு ஒத்துழைத்து விவசாயிகள் தங்கள் நிலங்களை வழங்கியுள்ளனர்.ஆனால் சாலை உயரமாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு செல்ல சரியான வழித்தடம் இல்லாமல் அவதிப்படும் நிலை உள்ளது.எனவே விவசாயிகள் நான்கு வழிச்சாலைக்கு அருகில் உள்ள தங்கள் விளை நிலங்களுக்கு செல்லும் வகையில் பாதுகாப்பான வழித்தடம் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மடத்துக்குளத்தையடுத்த வேடப்பட்டி பகுதியில் சாலைக்கு அடியில் சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.இந்த குழாய்களால் காலப்போக்கில் சாலையின் உறுதித்தன்மை பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.எனவே இந்த பகுதியில் சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்டதன் நோக்கம், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.மேலும் இந்த பகுதில் கட்டப்பட்ட பாலம் பலமுறை இடித்து கட்டப்பட்டு கொண்டிருக்கிறது.இதற்கு திட்ட வடிவமைப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?இதனால் ஏற்படும் நிதி இழப்பு ஆகியவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.மிகச் சிறந்த திட்டத்தில் சிறிய குளறுபடிகளும் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலமே பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முடியும்'என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.