ஊருக்குள் புகுந்த 4 காட்டு யானைகளால் பரபரப்பு


ஊருக்குள் புகுந்த 4 காட்டு யானைகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Nov 2022 1:00 AM IST (Updated: 23 Nov 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த 4 காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர்.

தர்மபுரி

பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த 4 காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர்.

காட்டு யானைகள்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சுற்றி பிக்கனஅள்ளி, மொரப்பூர், காப்புக்காடு, திருமல்வாடி ஆகிய அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் வருகின்றன. மேலும் விவசாய பயிர்களையும் நாசம் செய்கின்றன. சில இடங்களில் யானைகள் மிதித்து கிராம மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

கடந்த 2 ஆண்டுகளில் 5 பேர் வரை யானை மிதித்து இறந்துள்ளனர். அதேபோன்று கடந்த 3 மாதத்துக்கு முன்பு மின்வேலியில் சிக்கி யானை இறந்துள்ளது. அதே போன்று வழிதவறி வரும் யானைகள் கிணற்றில் விழுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. காட்டு யானைகளால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

4 யானைகள்

நேற்று அதிகாலை பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி 20 வயது கொண்ட 3 யானைகள், ஒரு குட்டி யானை என 4 காட்டு யானைகள், உணவு தேடி கிராமத்துக்குள் கூட்டமாக நுழைந்தன. நெல், தக்காளி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் கூச்சலிட்டும், பட்டாசு வெடித்தும் துரத்தினர்.

ஆனால் யானை அப்பகுதியை விட்டு வெளியேறாமல் அங்கேயே இருந்ததால் அப்பகுதி மக்கள் பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் தாரை தப்பட்டை அடித்தும், பட்டாசு வெடித்தும் அப்பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானைகளை அருகில் உள்ள மொரப்பூர் காப்பு காட்டுக்கு விரட்டியடித்தனர்.

வனத்துறை திணறல்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக காட்டு யானைகள் இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை அழித்து வருவதாகவும், காட்டு யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், மேலும் யானை ஊருக்குள் வராதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.


Next Story