ரெயிலில் ரேஷன் அரிசி கடத்திய 4 பெண்கள் கைது
ஜோலார்பேட்டையில் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்திய 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி மற்றும் போலீசார் நேற்று காலை 11 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அந்த ரெயிலில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றுவதற்கு பிளாட்பாரத்தில் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து, 4 பெண்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் ஜோலார்பேட்டையை அடுத்த சந்தைக்கோடியூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி விஜயலட்சுமி (வயது 48), மலையடிவாரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி அம்மு (38), நாட்டறம்பள்ளியை அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மனைவி சரசு (70), வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த மோகன் மனைவி முனியம்மாள் (54) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைதுசெய்து, சிறு சிறு மூட்டைகளில் வைத்திருந்த ½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.