மூலப்பொருள் விலை ஏற்றத்தால் பட்டாசு விலை 40 சதவீதம் உயர்வு
மூலப்பொருள் விலை ஏற்றத்தால் பட்டாசு விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
தாயில்பட்டி,
மூலப்பொருள் விலை ஏற்றத்தால் பட்டாசு விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
மூலப்பொருட்கள் விலை உயர்வு
பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல் குளோரேட், அட்டைகள் உள்பட பல்வேறு மூலப்பொருட்களின் விலை தற்போது 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல் விலை ரூ.50 முதல் ரூ.150 வரை விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பொட்டாசியம் நைட்ரேட் கிலோ ரூ.60-க்கு விற்பனையானது. தற்போது ரூ. 140 ஆக விலை உயர்ந்துள்ளது. பேக்கிங் செய்யப்படும் அட்டைகள் கிலோ ரூ. 42-க்கு விற்பனையானது தற்போது ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. கம்பி மத்தாப்புக்கு பயன்படுத்தப்படும் பேரியம் நைட்ரேட் தடை செய்யப்பட்டுள்ளதால் சிவப்பு கலர் பயன்படுத்த வேண்டி உள்ளது. சிவப்பு கலரின் விலை தற்போது 3 மடங்காக விலை உயர்ந்துள்ளது.
பட்டாசு விலை ஏற்றம்
மேலும் பச்சை உப்புக்கு தடை காரணமாக விலை தொடர்ந்து உயர்வதால் பட்டாசு விலை தற்போது 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
பட்டாசு விலையினை நிர்ணயிக்க முடியாமல் பட்டாசு ஆலைகள் உரிமையாளர்கள் திணறுகின்றனர்.
எனவே மூலப்பொருட்கள் தொடர்ந்து விலை உயர்வதை மத்திய, மாநில, அரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளைஞர்கள் ஏமாற்றம்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. சரவெடிகள் மட்டுமே தயாரிக்க அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ளன. பேரியம் நைட்ரேட் தடை காரணமாக தற்போது அங்கு சரவெடிகள், கம்பி மத்தாப்பு தயாரிக்கப்படுவது இல்லை.
இது பொதுமக்களுக்கு சரிவர தெரியாததால் வாடிக்கையாளர்கள் கம்பி மத்தாப்பு, சரவெடிகளில் 100 வாலா, ஆயிரம் வாலா, 10 ஆயிரம் வாலா, வெடிகளை அதிக அளவில் கேட்டு வருகின்றனர். இளைஞர்களை கவரக்கூடிய சரவெடிகள் விற்பனைக்கு வராததால் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்ப செல்கின்றனர். சிலரக வெடிகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டதால் பல பட்டாசு கடைகள் இன்னும் விற்பனையை தொடங்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.