தர்மபுரி நகராட்சியில் தூய்மை பணி: 40 டன் குப்பைகள் அகற்றம்
தர்மபுரி நகராட்சியில் தூய்மை பணி:
40 டன் குப்பைகள் அகற்றம்தர்மபுரி:
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாவையொட்டி தர்மபுரி நகராட்சி பகுதியில் சேர்ந்த 40 டன் குப்பைகள் தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.
33 வார்டுகள்
தர்மபுரி நகராட்சி பகுதியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சேரும் குப்பைகளை அகற்றும் பணி நகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணியில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். வழக்கமான நாளில் தர்மபுரி நகராட்சி பகுதியில் சராசரியாக 22 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தது.
இரு மடங்கு குப்பைகள்
இந்த நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய விழாக்களையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்கள், கடைகளில் வாழை மரக்கன்றுகள் கட்டியும், சாம்பல் பூசணிகளை உடைத்தும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதற்காக சாலை ஓரங்களில் தற்காலிக கடைகள் அமைத்து வாழை மரக்கன்றுகள், சாம்பல் பூசணி மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
பூஜைகள் முடிந்த பின் வாழை மரக்கன்றுகள், மலர் மாலைகள், மாவிலை உள்ளிட்ட பூஜை பொருட்கள், சாலையோர பகுதிகள் மற்றும் தெரு ஓரங்களில் கொட்டப்பட்டன. மேலும் தற்காலிக கடை அமைத்திருந்தவர்கள், விற்பனையாகாமல் இருந்த வாழைக்கன்றுகள், சாம்பல் பூசணிகளை அங்கேயே விட்டு சென்றனர். இதன் காரணமாக தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் வழக்கமாக சேரும் குப்பையை விட இரு மடங்கு குப்பைகள் சேர்ந்தன.
40 டன் அகற்றம்
இவற்றை சேகரித்து அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாட்களில் தர்மபுரியில் சேர்ந்த சுமார் 40 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக அகற்றப்பட்டன.