கம்போடியாவில் தமிழகத்தை சேர்ந்த 400 பேர் உணவின்றி சிக்கி தவிப்பு


கம்போடியாவில் தமிழகத்தை சேர்ந்த 400 பேர் உணவின்றி சிக்கி தவிப்பு
x

கம்போடியாவில் தமிழகத்தை சேர்ந்த 400 பேர் உணவின்றி சிக்கி தவித்து வருவதாக விமானம் மூலம் திருச்சி திரும்பிய புதுக்கோட்டை வாலிபர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

திருச்சி,

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சையது இப்ராகிம் (வயது 28). கம்போடியா நாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கோலாம்பூரில் இருந்து வந்த விமானத்தில் நேற்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் கம்போடியாவில் தமிழகத்தை சேர்ந்த 400 பேர் உணவின்றி சிக்கி தவித்து வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் வணிக விசாவில் கடந்த ஜூலை மாதம் ரூ.3 லட்சம் செலவு செய்து கம்போடியா சென்றேன். என்னை திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் அங்கு அனுப்பி வைத்தனர். கம்போடியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் என்னை 4 ஆயிரம் டாலருக்கு விற்பனை செய்தார். அங்கு எனக்கு உரிய வேலை ஏதும் கொடுக்கவில்லை.

ஆயிரம் டாலர் சம்பளம் கொடுப்பேன் என்று கூறிவிட்டு, சம்பளம் கொடுக்காமல் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தினர். ஏதேனும் உதவி தேவை என்று கேட்டால் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

நான் முதலில் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கு தகவல் தெரிவித்தேன். பல்வேறு முயற்சிகளுக்கு இடையே எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் உதவியுடன் திருச்சி வந்து சேர்ந்தேன்.

தமிழகத்தை சேர்ந்த 400 பேர்

தமிழகத்தை சேர்ந்த இன்னும் 400-க்கும் மேற்பட்டோர் கம்போடியாவில் சிக்கி தவித்து வருகின்றனர். அங்கு அவர்கள் சொல்லும் சமூக விரோத வேலையை செய்யவில்லை என்றால் அடிப்பது, உணவை கொடுக்காமல் விடுவது, மின்சாரத்தை உடலில் பாய்ச்சுவது போன்ற கொடுமைகளை செய்கின்றனர். அதற்கான வீடியோ என்னிடம் உள்ளது. துப்பாக்கி வைத்து மிரட்டுகின்றனர்.

இந்திய தூதரகத்தை சேர்ந்தவர்களே அவர்களிடம் பேச பயப்படுகிறார்கள். இப்போது தான் மீட்பதற்கு முயற்சி செய்கின்றனர். கம்போடியாவில் உணவின்றி தவிக்கும் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story