4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டெடுப்பு


4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டெடுப்பு
x

வேட்டவலம் அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

வேட்டவலம் அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கற்செதுக்கு உருவங்கள்

வேட்டவலம் அருகே உள்ள நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் சிங்கமலை அடிவாரத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு குகையின் பாறை சுவற்றில் பாறைக் கீறல்கள் உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வரலாற்று ஆய்வாளர்களான பாரதிராஜா, சீனுவாசன், பாலமுருகன், பழனிச்சாமி, சிற்றிங்கூர் ராஜா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதில் வரலாற்று சிறப்புமிக்க கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள இந்த செதுக்கு உருவத்தொகுதியில் சுமார் 10 மனித உருவங்களும், 10-க்கும் மேற்பட்ட விலங்குகளின் உருவங்களும் காணப்படுகின்றன.

இதுகுறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது:-

இந்த குகைக்சுவற்றில் கால்நடை சமூகம் சார்ந்த உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. இவ்வுருவங்களில் திமிலுடைய மாடுகளும் அவற்றை சுற்றி கையில் எவ்வித ஆயுதங்களும் இன்றி மனிதர்களும் காணப்படுவதால் ஒருவேளை மாடுகளை பிடிப்பது போன்ற அணுகு முறையில் செதுக்கப்பட்டிருக்கலாம்.

வேட்டை சமூகம் கால்நடை சமூகமாக மாறும் போது வனத்திலுள்ள மாடுகளை பிடித்து பழக்கப்படுத்துவது ஒரு முக்கிய நிகழ்வாகும்.

4 ஆயிரம் ஆண்டுகள் பழமை

இந்த கற்செதுக்குகளும் அதுபோன்ற ஒரு நிகழ்வை நினைவு கூற உருவாக்கப்பட்டு இருக்கலாம். மேலும் இங்குள்ள மனிதர்கள் மாடுகளை பிடிப்பது போன்ற கை பாவனையோடு காணப்படுவதால் இன்றைய ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு விளையாட்டுகளுக்கு ஒத்த நிகழ்வாக இவற்றை கருதலாம்.

நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் மற்றும் மதுரை அருகேயுள்ள அணைக்கட்டி பாறை ஓவிங்களிலும் இங்குள்ளதை போலவே மாடுகளைப் பிடிக்கும் காட்சிகள் காட்டப்பட்டு உள்ளது.

இம்மலையின் தென்மேற்கு பகுதியில் உள்ள செத்தவரை அய்யனார் மலையிலுள்ள பாறை ஓவியங்களில் உள்ள காளைகளைப் போன்றே இங்கும் செதுக்கப்பட்டு உள்ளது சிறப்பம்சமாகும்.

இக்கற்செதுக்கு உருவங்கள் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.

இதுபோன்ற செதுக்கு உருவங்கள் வெகுசில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளது என்பதால் இந்த இடத்தை பாதுகாப்பதோடு, சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்தால் மேலும் பல தகவல்களை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story