4,043 விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்


4,043 விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்
x

4,043 விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கோட்ட செயற்பொறியாளர் (பொது) சேகர் தலைமையில் நடந்தது. பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இதில் மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து 5-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் கோட்ட செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி வரை மொத்தம் 3 ஆயிரத்து 487 விவசாயிகள் தங்களுக்கு மின் இணைப்பு வேண்டி முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து மின் இணைப்பிற்காக காத்திருக்கின்றனர். இவற்றில் கணினி முறையில் பதிவு செய்ய தகுதியானவர்கள் மொத்தம் 156 பேரும், கணினியில் பதிவு செய்து மின்இணைப்பு பெற தகுதியானவர்கள் 400 பேரும் உள்ளனர். நடப்பு நிதி ஆண்டில் விவசாய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளனர். இதன்படி இதுவரை மொத்தம் 4,043 பேர் மின் இணைப்பிற்காக காத்திருக்கின்றனர்.

ஆகவே பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மின்இணைப்பு கிடைக்க தயார்நிலை பதிவேட்டில் பதிவு செய்யவும், மின்இணைப்பு வழங்க இலக்கீடு நிர்ணயம் செய்யவும் முதல்-அமைச்சர் மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ேவண்டும், என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கோரிக்கையை விவசாயிகளும் வலியுறுத்தி பேசினர். இதையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட மின் அதிகாரி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.


Next Story