பாலிடெக்னிக்கில் ரூ.41½ லட்சம் மோசடி
விருதுநகர் அருகே தனியார் பாலிடெக்னிக்கில் ரூ.41½ லட்சம் மோசடி செய்ததாக அங்கு பணியாற்றிய பெண் ஊழியர் உள்பட 2 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே தனியார் பாலிடெக்னிக்கில் ரூ.41½ லட்சம் மோசடி செய்ததாக அங்கு பணியாற்றிய பெண் ஊழியர் உள்பட 2 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் பாலிடெக்னிக்
விருதுநகர் அருகே ஆனைக்குட்டத்தில் தனியார் பாலிடெக்னிக் உள்ளது. இங்கு சிவகாசி என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ஜோசப் லயோலா(வயது 47) என்பவர் கடந்த 25 வருடங்களாக காசாளராக பணியாற்றி வந்தார். இதே பாலிடெக்னிக்கில் சிவகாசி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த செல்வ சுதா(35) என்பவர் கணக்கராக பணியாற்றி வந்தார்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட கடந்த 2020-ம் ஆண்டு பாலிடெக்னிக் கணக்கில் மாணவர்கள் செலுத்திய கல்வித்தொகை கணக்கில் வித்தியாசம் இருந்ததால் அது பற்றி ஆய்வு செய்ய நிர்வாகக்குழு தலைவர் சுதர்சன்(52) என்பவர் ஏற்பாடு செய்தார்.
மோசடி
ஆய்வின்போது காசாளர் ஜோசப் லயோலாவும், கணக்கர் செல்வ சுதாவும் சேர்ந்து கடந்த 2019 முதல் 2020-ம் ஆண்டு வரை மாணவர்களின் கல்விககட்டணத்தொகை மற்றும் விடுதி கட்டண தொகை ஆகியவற்றில் ரூ.48 லட்சத்து 5 ஆயிரத்து 823-ஐ மோசடி செய்திருந்தது தெரியவந்தது.
கல்வி மற்றும் விடுதி கட்டண தொகைக்கு மாணவர்களுக்கு ரசீது வழங்கப்பட்ட நிலையில் தொகையை கணினி கணக்கில் ஏற்றப்படாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை
இதுபற்றி கல்வி நிர்வாக குழு விசாரணை நடத்த ஏற்பாடு செய்யும்போது காசாளர் ஜோசப் லயோலா விசாரணைக்கு ஆஜராகி ரூ. 6.5 லட்சத்தை திருப்பி செலுத்தி விட்டார். மீதம் ரூ.41 லட்சத்து 55 ஆயிரத்து 863 செலுத்தப்பட வேண்டியிருந்தது. இந்தநிலையில் கணக்கர் செல்வ சுதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை. பலமுறை தகவல் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. பாலிடெக்னிக்கில் வேலை பார்த்ததால் இருவரும் பணத்தை செலுத்தி விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் பணம் திரும்ப செலுத்தப்படவில்லை.
வழக்கு பதிவு
இதனை தொடர்ந்து நிர்வாக குழு தலைவர் சுதர்சன் கொடுத்த புகாரின்பேரில் காசாளர் ஜோசப் லயோலா, கணக்கர் செல்வ சுதா ஆகிய 2 பேர் மீதும் ரூ.41 லட்சத்து 55 ஆயிரத்து 863-ஐ மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.