650 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.42½ கோடி கடனுதவி


650 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.42½ கோடி கடனுதவி
x

ஜோலார்பேட்டை பகுதியில் 650 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.42½ கோடி மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.

திருப்பத்தூர்

ரூ.42½ கோடி கடனுதவி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 42,081 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,548 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பால்னாங்குப்பம் பகுதியில் 650 சுய உதவிக்களுக்கு ரூ.42.65 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி வரவேற்றார். கலெக்டர் அமர்குஷ்வாஹா கடன் உதவிகளை வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

தொழிலதிபர்கள் போல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 7,880 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இது மாவட்டத்தின் மக்கள் தொகையில் 7 முதல் 8 சதவீதமாகும். 20 வருடத்திற்கு முன்பு வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த பெண்கள் இப்போது இந்த திட்டத்தின் மூலம் தொழிலதிபர்கள் போல் வங்கி கடன் பெற்று சுயதொழில் நடத்தி வருகின்றனர். இந்த திட்டம் அனைத்து மகளிர்களும் வங்கிகளுக்கு சென்று கடன் உதவி பெற வழி வகையை செய்துள்ளது.

மாதனூர் வட்டாரத்தில் ஒரு குழு வங்கியிடமிருந்து கடன் பெற்று, அதன் மூலம் ஐந்து கோழிப் பண்ணைகளை தொடங்கி நடத்தி வருகின்றனர். சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிர் பலரும் தொழில் முனைவோராக உருவாகி வளமோடு வாழ இத்திட்டம் வழிவகுக்கும்.

ரூ.500 கோடி இலக்கு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான வங்கிக்கடன் உதவி இலக்காக ரூ.500 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ரூ.315.39 கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரகப்பகுதியில் 508 சுய உதவி குழுக்களுக்கு ரூ.30.03 கோடி வங்கி கடன், தமிழ்நாடு நகரப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நகர்புறப்பகுதிகளில் உள்ள 134 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.7.65 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகள் உள்பட மொத்தம் 650 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.42.65 கோடி மதிப்பிலான வங்கி கடனுக்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதிஷ் குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கவிதா தண்டபானி, சிந்துஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் உமா கன்ரங்கம், உதவி திட்ட அலுவலர்கள் வேதநாயகம், முருகேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story