பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் 425 மாணவ- மாணவிகளுக்கு பட்டம்


பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் 425 மாணவ- மாணவிகளுக்கு பட்டம்
x

பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் 425 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி செட்டியப்பனூரில் உள்ள பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியின் 21-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் எஸ்.நித்யானந்தம், நிர்வாக இயக்குனர் கே.டி.அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். தாளாளர் ஆர்.சரோஜா, பொருளாளர் பிரமிளா ஆகியோர் முன்னிலை வைத்தனர். கல்லூரி முதல்வர் கே.விஜயராஜ் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர்.கே.சிவன் கலந்து கொண்டு 425 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-

வாணியம்பாடி மற்றும் சுற்று பகுதியில் உள்ள சாதாரண கிராமப்புற மாணவர்களும் பொறியியல் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக கடந்த 1995-ம் ஆண்டு இந்த கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இன்று பட்டம் பெறும் மாணவர்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அத்தனை வகையிலும் பாடுபட வேண்டும். உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த பெற்றோர்கள் பாராட்டும் படியாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இந்தியா பிற நாடுகளை விட தற்போது மிகச் சிறந்த நாடாக விளங்கி வருகிறது. நல்ல மாணவர்களால்தான் நாட்டை முன்னேற்றபாதையில் அழைத்துச் செல்ல முடியும். சிலர் குறைந்த மதிப்பெண் எடுத்து இருக்கலாம், ஆனால் அதை ஒரு பொருட்டாக கருத்தில் கொள்ளாமல், மென்மேலும் தொடர்ந்து வெற்றி பெற உழைத்திட வேண்டும். நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அது ஒரு புறம் இருக்க படித்த மாணவர்கள் அனைவருமே அரசு பணியை தேடாமல், தொழிற்சாலைகளை தொடங்கி பலருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியை கல்லூரி ஆங்கில பேராசிரியை ரேகா தொகுத்து வழங்கினார். கல்லூரி இயக்குனர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


Next Story