பயனாளிகளுக்கு ரூ.43 கோடி கடன் உதவி


நாகையில் நடந்த விழாவில் ரூ.43 கோடி பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

நாகையில் நடந்த விழாவில் ரூ.43 கோடி பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

ரூ.43 கோடி கடன் உதவி

திருச்சி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன் உதவிகள் வழங்குதல், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர்களுக்கு விருதுகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விழா காணொலிக்காட்சி மூலம் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி வளாகத்தில் நடந்தது.விழா முடிவில் நாகை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.43 கோடி மதிப்பில் கடன்உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். முகமதுஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

அப்போது கலெக்டர் அருண்தம்புராஜ் பேசியதாவது:-

திருப்பி செலுத்த வேண்டும்

மகளிர் தங்களது பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது. வங்கிகளில் பெறும் கடன் தொகையை குறித்த காலத்தில் செலுத்த வேண்டும்.

நாகை மாவட்டத்தில் இதுவரை மகளிர் சுயஉதவி குழுவினர் பெற்ற கடன்களை சரியான முறையில் செலுத்தி இருப்பது பாராட்டத்தக்கது ஆகும்.

சரியான நேரத்தில் வாங்கிய கடன்தொகையை செலுத்தினால் மீண்டும், மீண்டும் அதிக அளவு தொகையை கடன்உதவியாக பெற முடியும். மகளிர் சுய உதவி குழுவினர் பொருட்களை உற்பத்தி செய்தவுடன் தங்களது பொருட்களை சந்தைப்படுத்த வேண்டும்.

சந்தைப்படுத்த வசதி

மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் வசதிகள் செய்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

831 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.33.88 கோடியும், 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.6.92 கோடியும், திட்ட நிதியிலிருந்து சமுதாய முதலீட்டு நிதி ரூ.2.29 கோடி 209 குழுக்களுக்கும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 8 ஊராட்சிகளுக்கு இணைமானியமாக ரூ.28 லட்சமும் என ரூ.43 கோடியே 10 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story