மாடு விடும் விழாவில் 448 காளைகள் பங்கேற்பு


மாடு விடும் விழாவில் 448 காளைகள் பங்கேற்பு
x

கன்னிகாபுரம், வரதலம்பட்டு கிராமங்களில் நடந்த மாடு விடும் விழாவில் 448 காளைகள் பங்கேற்றன. இதில் மாடுகள் முட்டியதில் 37 பேர் காயமடைந்தனர்.

வேலூர்

மாடு விடும் விழா

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கையை அடுத்த சத்தியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தில் நல்லதாய் அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நேற்று நடந்தது. சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பால்வேணி இளங்கோவன், கவுன்சிலர் சிவா, குப்புசாமி, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர். போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து 300 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

காளைகளை கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்து பிறகு வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகள் சீறிப் பாய்ந்து ஓடுவதை காண நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். காளை ஓடும் பகுதியில் இளைஞர்கள் நின்றுகொண்டு மாட்டின் மீது கையை போட்டு உற்சாகப்படுத்தினர். மாடுகள் முட்டியதில் 19 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முதல் பரிசாக ரூ.70 ஆயிரம். இரண்டாம் பரிசு ரூ.60 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் என 50 பரிசுகள் அறிவிக்கப்பட்டன. வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் கருணாகரன், விரிஞ்சிபுரம் சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் கேசவன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கன்னிகாபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

வரதலம்பட்டு

அணைக்கட்டு தாலுகா வரதலம்பட்டு கிராமத்தில் காளை விடும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு விழாவை காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தனர்.

போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு ஊர்களிலிருந்து 248 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பிறகு வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவிழ்த்து விடப்பட்ட காளைகள் இலக்கை நோக்கி அதிவேகமாக ஓடின.

காளைகள் ஓடும் பாதையில் நின்றிருந்த பார்வையாளர்களை முட்டிமோதி விட்டு இலக்கை அடைந்தன. அப்போது 18-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெற்றிபெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரம் வழஙஅகப்பட்டது. மொத்தம் 52 பரிசுகளுக்கு மேல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

இரண்டு இடங்களிலும் நடந்த விழாவில் மாடுகள் முட்டியதில் 37 பேர் காயமடைந்தனர்.


Next Story