சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி; சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் ஆலோசனை


சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி; சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் ஆலோசனை
x

சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

சென்னை

சென்னை:

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சா்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 27ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நடக்க விருக்கிறது. இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனா்.


சென்னை விமான நிலையம்

இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு வீரா், வீராங்கனைகள் அனைவரும் தங்கள் நாடுகளில் இருந்து விமானங்களில் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்து சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நட்சத்திர ஒட்டல்களுக்கு செல்கின்றனா். பின்னர் போட்டிகள் முடிந்து தங்கள் நாடுகளுக்கு திரும்பும் போதும் சென்னை விமான நிலையம் வழியாகவே செல்ல உள்ளனர். வீரர்கள் மட்டுமின்றி போட்டிகளை காண ஏராளமான வெளிநாட்டு பாா்வையாளா்களும் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதனால் சென்னை விமான நிலையத்தில் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளிநாட்டவா்கள், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக வருபவா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். செஸ் போட்டிக்கான சிறப்பு ஏற்பாடுகளை சென்னை விமான நிலையம் உள்நாடு, பன்னாட்டு முனையங்களில் செய்ய இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்து உள்ளது.


சிறப்பு ஏற்பாடு

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள், பார்வையாளர்கள், சிரமம் இல்லாமல் சோதனைகளை விரைந்து முடித்து வெளியேற உரிய வசதிகள் ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. குடியுரிமை, சுங்க சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை என அனைத்து பிரிவுகளில் சிறப்பு தனி கவுண்டா்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளன.

மேலும் வீரர்கள், பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினா், சென்னை மற்றும் தாம்பரம் மாநகர காவல் துறையினா், செங்கல்பட்டு மாவட்ட போலீசாா் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு வருபவா்களுக்கு எந்த விதமான இடையூறுகள், தடங்கள்கள் ஏற்படாமல் அனைத்து வதசிகளையும் உடனுக்குடன் சென்னை விமான நிலையத்தில் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.


ஆலோசனை கூட்டம்

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் விமான நிலைய உயா் அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள், குடியுரிமை அதிகாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிள், தமிழக போலீஸ் அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.

முதல் கட்ட கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் பல விதமான ஆலோசனைகளை தெரிவித்தனர். அப்போது எந்தெந்த பகுதிகளில் எத்தனை சிறப்பு கவுண்டா்கள் அமைப்பது என்று ஆலோசனை நடந்தது. இதன்படி செஸ் ஒலிம்பியோட் போட்டியின் போது விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் சிக்கல்கள் எதிர் கொள்வதை தவிர்க்கவும் விரைவாக வெளியேறவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story