45 அடி உயர வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
தேவதானம்பேட்டையில் 45 அடி உயர வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
செஞ்சி
செஞ்சியை அடுத்த தேவதானம்பேட்டையில் புதிதாக 45 அடி உயர வீர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 11-ந் தேதி கிராம தேவதைகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்து விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பிரவேசம் முதற்கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. 12-ந் தேதி 2-வது கால யாக பூஜை, கோ-பூஜை, 1,008 விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகியவை நடைபெற்றன.
பின்னர் நேற்று காலை 7 மணிக்கு 4-வது கால யாக பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு மேளதாளம் இசைக்க யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று 45 அடி உயரம் உள்ள வீர ஆஞ்சநேயர் சிலையில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் தேவதானம்பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.