விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 12 நாட்களில்கஞ்சா விற்ற 45 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 12 நாட்களில் கஞ்சா விற்ற 45 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையால் பல இடங்களில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் பெருகி வருகின்றன. சில இடங்களில் கஞ்சா பயன்படுத்துபவர்களால் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன.
எனவே கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 நடத்த வேண்டுமென அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 தொடங்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
45 பேர் கைது
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மேற்பார்வையில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார், கடந்த 1-ந் தேதி முதல் கஞ்சா வேட்டையில் அதிரடியாக இறங்கியுள்ளனர். அதன்படி நேற்று வரை 12 நாட்களில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 45 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த கஞ்சா வேட்டை மாவட்டம் முழுவதும் நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.