முதல் நாளில் படகு சவாரி செய்த 450 சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு இயக்கப்பட்டு வரும் உல்லாச படகில் முதல் நாளில் 450 சுற்றுலா பயணிகள் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு இயக்கப்பட்டு வரும் உல்லாச படகில் முதல் நாளில் 450 சுற்றுலா பயணிகள் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
படகு போக்குவரத்து
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்து விட்டு திரும்புவார்கள்.
இவற்றை காணச்செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவையை நடத்தி வருகிறது.
அதிநவீன படகுகள்
இதற்கிடையில் 2019-ம் ஆண்டு ரூ.8 கோடியே 25 லட்சம் செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய இரு அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது. கன்னியாகுமரி கடலின் தன்மை அடிக்கடி மாறுவதால் இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படாமல் படகுதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச பயணம் சென்று வர பயன்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்து வந்தன.
அதன் பயனாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளும் நேற்று முன்தினம் முதல் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
450 பேர் பயணம்
இந்த உல்லாச படகு சவாரியை தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று முன்தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குளுகுளு வசதி கொண்ட படகில் பயணம் செய்ய நபர் ஒன்றுக்கு ரூ.450 வீதமும், சாதாரண படகில் பயணம் செய்ய நபர் ஒன்றுக்கு ரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் பிரத்யேக கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை நேற்று ஒரே நாளில் 4 முறை நடந்த உல்லாச படகு சவாரியில் 450 சுற்றுலா பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்
அவ்வாறு படகில் சென்ற சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கடல் பயணத்தை ரசித்தனர். உல்லாச படகில் சென்ற சுற்றுலா பயணிகள் பலர் இருக்கையில் இருந்தவாறு தங்கள் செல்போன்களில் திருவள்ளுவர் சிலை தெரியும் வகையில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
படகு பயணம் குறித்து மலேசியாவில் இருந்து வந்திருந்த சுற்றுலாப்பயணி சாம்:-
மலேசியாவில் இருந்து தற்போது இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளோம். பிறநாடுகளில் இருப்பது போல கன்னியாகுமரியில் இப்படி ஒரு படகு சவாரி இருப்பது எங்களுக்கு வியப்பை தருகிறது. படகில் சென்று முழுமையாக கடல் அழகை ரசித்தோம். இந்த உல்லாச படகு சவாரி மிகவும் அருமையாக உள்ளது. புதிய படகு என்பதால் சுத்தமாக உள்ளது. இதுபோல படகு தொடர்ந்து சுத்தமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுவாரசியமாக இருந்தது
கொல்கத்தாவைச் சேர்ந்த சிறுவன் விதார்த்:-
இந்த கப்பல் பயணம் கன்னியாகுமரியில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் இங்கு வந்த நேரத்தில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். ஒன்றரை மணி நேர கடல் பயணம் மிகவும் சுவாரசியமாக இருந்தது.
தஞ்சாவூரை சேர்ந்த சுற்றுலாப்பயணி வித்தியா:-
கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை மேற்கொண்ட படகு பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் இதற்கு முன்பு பலமுறை கன்னியாகுமரி வந்துள்ளோம். ஆனால் அப்போதெல்லாம் படகில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மட்டுமே சென்று வந்துள்ளோம். இது போன்ற கடல் பயணம் மிகவும் உற்சாகமாக உள்ளது. வட்டக்கோட்டை வரை செல்லும் இந்த படகு அங்கு சுற்றுலா பயணிகளை இறக்கி விட்டால் நன்றாக இருக்கும். அப்போதுதான் வட்டக்கோட்டையை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் படகில் கன்னியாகுமரி திரும்பினால் நன்றாக இருக்கும். அந்த வகையில் திட்டம் அமையப்பெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கட்டணத்தை குறைக்க வேண்டும்
திருச்சியைச் சேர்ந்த சவுந்தர்யா:-
இந்த படகு பயணம் ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஆனால் டிக்கெட் விலை மட்டும் கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. நடுத்தர குடும்பத்தைச் ேசர்ந்த சுற்றுலாப் பயணிகள் இந்த வாய்ப்பை பெறும் வகையில் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கன்னியாகுமரி-வட்டக்கோட்டை உல்லாச படகு சவாரி சுற்றுலா பயணிகள் மற்றும் குமரி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.