4 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு 456 பேர் நேர்காணலில் பங்கேற்பு
காட்பாடி தாலுகாவில் 4 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு நடந்த நேர்காணளில் 456 பேர் கலந்து கொண்டனர். இதில் 160 பேர் பட்டதாரிகள்.
கிராம உதவியாளர் பணியிடங்கள்
காட்பாடி தாலுகாவில் காங்கேயநல்லூர், தலையாரம்பட்டு, இளையநல்லூர், எருக்கம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளது. இதனை நிரப்ப அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இந்த 4 பணியிடங்களுக்கு 872 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 639 பேர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. காட்பாடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெகதீஸ்வரன் தலைமையில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணல் மற்றும் சைக்கிள் ஓட்டும் தேர்வு நடந்தது.
பட்டதாரிகள்
இந்த நேர்முகத் தேர்வு கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. நேர்முகத் தேர்வில் 456 பேர் பங்கேற்றனர். 183 பேர் கலந்து கொள்ளவில்லை. கிராம உதவியாளர் பணியிடத்திற்கு 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால் இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2, டிப்ளமோ, பட்டதாரிகள், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பி.ஏ., பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., என்ஜினீயரிங் என இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் 160 பேர் கலந்து கொண்டனர். மேலும் 11 முன்னாள் ராணுவ வீரர்களும் பங்கேற்றனர்.
கிராம உதவியாளர் பணியிட தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் ஆகும். இதில் சொந்த கிராமம் என்றால் 25 மதிப்பெண்ணும், சொந்த தாலுகா என்றால் 25 மதிப்பெண்ணும், நேர்முக மற்றும் எழுத்து தேர்வுக்கு 40 மதிப்பெண்ணும், சைக்கிள் ஓட்டும் தேர்வுக்கு 5 மதிப்பெண்ணும், கார் ஓட்டினால் 10 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது.