ரூ.4,731 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்


ரூ.4,731 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் 2023-2024-ம் ஆண்டில் ரூ.4,731 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரியில் 2023-2024-ம் ஆண்டில் ரூ.4,731 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

கடன் திட்ட அறிக்கை

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நபார்டு வங்கி சார்பில், 2023-2024-ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

நீலகிரியில் ஆண்டுதோறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடன்களும், வணிக ரீதியான கடன்களும் வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்றன.

இதுபோன்ற கடன் வசதிகள் அளிப்பதன் மூலம் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்றிடவும், வேளாண்மையில் எந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்யவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் உதவும்.

முன்னுரிமை கடன்கள்

ஆண்டுதோறும் வங்கிகள் கடன் இலக்கு நிர்ணயம் செய்வது வழக்கம். இதன்படி 2023-2024-ம் ஆண்டிற்கு நபார்டு வங்கியின் மூலம் ரூ.4,731.36 கோடி கடன் திட்ட இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.3,071.93 கோடி, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மேம்பாட்டுக்கு ரூ.580.63 கோடி, பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.1,078.80 கோடி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலாராவ், இந்திய ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் அமிர்தவல்லி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகசிவா, தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story