சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக 477 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று-வருவாய் அதிகாரி மேனகா தகவல்


சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக 477 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று-வருவாய் அதிகாரி மேனகா தகவல்
x

சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக 477 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா தெரிவித்துள்ளார்.

சேலம்

மனித சங்கிலி

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம், கையெழுத்து இயக்கம், மனித சங்கிலி ஆகியவை நடைபெற்றது. முன்னதாக எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1-ந் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி. எய்ட்ஸ் பரவலை குறைக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 1 லட்சத்து 70 ஆயிரத்து 606 பேருக்கு எச்.ஐ.வி. பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 477 பேருக்கு புதிதாக எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உதவித்தொகை

63 ஆயிரத்து 292 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி, எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 70 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொற்று இல்லாத குழந்தை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள 228 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க அறக்கட்டளை மூலம் ரூ.8 லட்சத்து 49 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவம், கல்வி ஆகியவற்றில் ஒதுக்காமல், அவர்கள் மீது அன்பு செலுத்தி அரவணைப்பதன் மூலம் சமூக புறக்கணிப்பு இல்லாமையை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் யோகானந், அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளர் தனபால், நலப்பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் நளினி மற்றும் டாக்டர்கள், நர்சுகள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story