சேற்றில் சிக்கிய லாரியில் 480 மூட்டை ரேஷன் அரிசி


சேற்றில் சிக்கிய லாரியில் 480 மூட்டை  ரேஷன் அரிசி
x

குடியாத்தம் அருகே சேற்றில் சிங்கிய லாரியில் 480 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

குடியாத்தம் அருகே சேற்றில் சிங்கிய லாரியில் 480 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேற்றில் சிக்கிய லாரி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அணங்காநல்லூர் கிராமத்திலிருந்து குடியாத்தம் நோக்கி கர்நாடக பதிவெண் கொண்ட லாரி ஒன்று கூட நகரம் ஏரிக்கரை மீது வந்துள்ளது. சில நாட்களாக பெய்த மழையினால் ஏரிக்கரை சேறும் சகதியுமாக இருந்தது. அதில் லாரியின் சக்கரங்கள் சிக்கியது. இதனால் லாரி அங்கிருந்து நகர முடியவில்லை.

கிராம மக்கள் சென்று விசாரித்தபோது லாரி டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசி உள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக இது குறித்து வருவாய்த்துறைக்கும், கலெக்டருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

480 மூட்டை ரேஷன் அரிசி

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் மேற்பார்வையில் குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, வருவாய் ஆய்வாளர்கள் ஜோதி ராமலிங்கம், சுகந்தி உள்ளிட்டோர் சென்று அந்த லாரியை சோதனை செய்த போது லாரியில் பிளாஸ்டிக் மூட்டைகள் இருந்துள்ளது.

அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக இரண்டு லாரிகள் கொண்டுவரப்பட்டு 480 அரிசி மூட்டைகளை ஏற்றி பாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடைகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து வாங்கி வேறு பைகளில் நிரப்பி மூட்டைகள் தைத்து ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு கடத்தும் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அப்படி கடத்த முயன்ற போது இந்த லாரி சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story