திருச்செந்தூர் அமலிநகரில் 4-வது நாளாக போராட்டம்:மீனவர்கள் குடும்பத்தினருடன் கோரிக்கை ஊர்வலம்


திருச்செந்தூர் அமலிநகரில் 4-வது நாளாக போராட்டம்:மீனவர்கள் குடும்பத்தினருடன் கோரிக்கை ஊர்வலம்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அமலிநகரில் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் குடும்பத்தினருடன் கோரிக்கை ஊர்வலம் சென்று கூட்டுப்பிரார்த்தனை நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அமலிநகர் கடல் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் 4-வது நாளாக நேற்று மீன்பிடிக்க செல்லாமல் குடும்பத்துடன் ஊர்வலமாக சென்று அமலிஅன்னை ஆலயம் முன்பு கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.

காலவரையற்ற வேலைநிறுத்தம்

திருச்செந்தூர் அமலிநகர் பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு கடந்த 2022-ம் ஆண்டு சட்டசபையில் அறிவிப்பு வெளியானது. இப்பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே, உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 7-ந் தேதி முதல் அமலிநகர் மீனவர்கள் மீன் பிடித்தொழிலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோரிக்கை ஊர்வலம்

இந்நிலையில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நேற்றுகாலையில் மீனவர்கள் குடும்பத்தினருடன் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புறப்பட்டு அமலி அன்னை ஆலயத்திற்கு சென்றடைந்தது. அந்த ஆலயம் முன்பு கோரிக்கை நிறைவேற குடும்பத்தினருடன் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஊர் நலக்கமிட்டி விளக்கம்

இந்த நிலையில் ஊர்நலக்கமிட்டியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீனவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம். கடந்த பிப். 23-ந் தேதி தூண்டில் வளைவு பாலம் அமைப்பது குறித்து மாவட்ட கலெக்டர் தந்த வாக்குறுதியை நம்பி முதல் கட்ட போராட்டம் கைவிடப்பட்டது. இப்பணி இதுவரை நடைபெறாததால் தான் கடந்த 8-ந் தேதி கலெக்டர் பேச்சுவார்த்தக்கு அழைப்பு விடுத்ததை நிராகரித்தோம்.

அதேபோல் கடந்த ஏப்.14-ந் தேதி மீன்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்திய போது, அவரும் 2 மாத காலத்திற்குள் பணிகள் தொடங்கும் என கூறினார். ஆனால் 4 மாதமாகியும் பணிகள் தொடங்கவில்லை. எனவே ரூ.58 கோடி செலவில் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலம் அமக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டதை, முதல்-அமைச்சரின் தனிக்கவனத்திற்கு கொண்டு சென்று அமைச்சர், அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story