தகராறில் கீழே தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு 4-வது மனைவி சாவு
மதுரை கோரிப்பாளையம் கான்சாபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 82), ஓய்வு பெற்ற தனியார் நிறுவன தொழிலாளி. 3 பெண்களை மணந்த இவருக்கு குழந்தை இல்லை. எனவே 4-வதாக சுசீலா(52) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கும் குழந்தை இல்லை. அந்தோணிசாமி அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டு கொண்டு இருந்துள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரத்தில் மனைவியை அவர் கீழே தள்ளி விட்டுள்ளார். அதில் கீழே விழுந்தவர் எழுந்திருக்கவில்லை.
அதன்பின்னர் வீட்டை விட்டு சென்ற அந்தோணிசாமி பல மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு கீழே விழுந்து கிடந்த சுசீலாவை எழுப்பி பார்க்கும் போது அவரது தலையில் அடிபட்டு இறந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் தல்லாகுளம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுசீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி சந்தேக மரணம் என்று முதற்கட்டமாக வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே பிரேத பரிசோதனையில் அந்தோணிசாமி தள்ளி விட்டதில் சுசீலா கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாக தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் அந்த வழக்கை கொலைவழக்காக மாற்றி மனைவியை கொலை செய்த அந்தோணிசாமியை கைது செய்தனர்.