புவனகிரி அருகே பஸ்சை வழிமறித்து பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் 5 பேர் கைது
புவனகிரி அருகே பஸ்சை வழிமறித்து பள்ளி மாணவர்களை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
மருதூர்,
புவனகிரி அருகே உள்ள குமுடிமுலையை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும், நத்தமேட்டை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதன் காரணமாக நத்தமேட்டை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர், அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து குமுடிமுலையை சேர்ந்த மாணவர்களை தாக்க திட்டம் தீட்டியதாக தெரிகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் குமுடிமுலையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் குறிஞ்சிப்பாடியில் இருந்து அரசு பஸ்சில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
பஸ்சை மறித்து தாக்குதல்
இதை அறிந்த நத்தமேட்டை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், அந்த பஸ் நத்தமேடு நந்தவெளி திடல் அருகில் வந்ததும் வழிமறித்தனர். பின்னர் குமுடிமுலையை சேர்ந்த மாணவர்கள் 5 பேரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் காயமடைந்த அவர்கள் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் 10 பேர் மீது மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நத்தமேட்டை சேர்ந்த சிந்தனை செல்வன்(வயது 22) மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர். பஸ்சை வழிமறித்து பள்ளி மாணவர்களை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.