ரெயிலில் மது, கஞ்சா கடத்திய 5 பேர் கைது
ஓடும் ரெயில்களில் மது, கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை
ஓடும் ரெயில்களில் மது, கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் சோதனை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் நேற்று காலை பிளாட்பாரங்களில் மற்றும் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர். இதில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்களை விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் ராம்நகர் பகுதியை சேர்ந்த தாளப்பா என்பவரின் மகன் தினேஷ் (வயது 33), ஒசக்கரஹல்லி பகுதியை சார்ந்த அம்பாலா கவுடா என்பவரின் மகன் நாகராஜ் (34), பெங்களூரு சிப்காட் ரோடு பகுதியை சேர்ந்த தவ்லாத் ராவ் (50) என்பதும், பெங்களூருவிலிருந்து வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா கடத்தல்
சேலம் உட்கோட்ட ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவு தனிப்படையினர் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் ரெயில் நிலையம் வரை ரெயில்களில் சென்று கஞ்சா மற்றும் போதை பொருள்கள் கடத்தப்படுகிறதா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று ஜார்க்கண்ட மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் விரைவு ரெயிலின் கடைசியில் உள்ள பொதுப் பெட்டியில் தனிப்படையினர் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சீட் இருக்கையில் அமர்ந்த இருந்த 2 பேரை விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் இருவரையும் ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது சம்பந்தமாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் விசாரணை செய்ததில் ஒடிசா மாநிலம் பிளாஸ்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் மகாகுட் என்பவரது மகன் பூபதி பூசன் மகாகுட் (23) மற்றும் பிஷிகேசன் போய் மகன் கார்த்திக் போய் (20) என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.