தனியார் மருத்துவமனை ஊழியர்களின் 5 செல்போன்கள், 2 மடிக்கணினிகள் திருட்டு


தனியார் மருத்துவமனை ஊழியர்களின் 5 செல்போன்கள், 2 மடிக்கணினிகள் திருட்டு
x

பெரம்பலூரில் தனியார் மருத்துவமனை ஊழியர்களின் அறையில் புகுந்த மர்ம ஆசாமிகள் 5 செல்போன்கள் மற்றும் 2 மடிக்கணினிகளை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெரம்பலூர்

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

பெரம்பலூரை அடுத்த திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்பாடி பிரிவு பாதை அருகே தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அதன் ஊழியர்களுக்கு விடுதியாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதியில் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரியும் மணிகண்டன் (வயது 34) மற்றும் அவருடன் பணிபுரியும் முகமது மூசின், அருண்குமார், சக்திவேல், வெங்கடேஷ், நெல்சன் ராஜ் ஆகியோர் 3 அறைகளில் தனித்தனியாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

செல்போன், மடிக்கணினி திருட்டு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணி முடிந்து மணிகண்டன் உள்ளிட்டோர் தங்களது அறைக்கு சென்றனர். மேலும், தீபாவளிக்காக ஊருக்கு சென்ற சக ஊழியர்கள் திரும்பி வருவார்கள் என்று அறைக் கதவுகளை தாள் போடாமல் அனைவரும் அயர்ந்து தூங்கி விட்டனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் மணிகண்டன் விழித்துபார்த்த போது அவரது செல்போன் உள்பட 5 பேரின் செல்போன்களும், 2 மடிக்கணினிகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசில் மணிகண்டன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் மற்றும் மடிக்கணினிகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story