அடுத்தடுத்து 5 வீடுகள், கடையின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வாணியம்பாடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 5 வீடுகள் மற்றும் கடையின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
5 வீடுகளில் திருட்டு
வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ்கமல், பர்வீன்தாஜ், அப்துல் மஜீத், ஜலாவுதீன். இவர்கள் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தனர். இந்த நிலையில் பூட்டிய வீடுகளை நோட்டுமிட்டு மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் அடுத்தடுத்து 5 வீடுகள் மற்றும் ஒரு கடையின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
பூட்டிய வீடுகள் திறக்கப்பட்டு இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வாணியம்பாடி டவுன் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
போலீஸ் விசாரணை
பின்னர் வீட்டின் உரிமையாளர்களுக்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் சொந்த ஊர் திரும்பிய வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் இருந்த பீரோக்கள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த நகை, பணத்தை பார்த்தபோது 10 சவரன் பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வீடுகளில் நடந்த இந்த திருட்டு சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.