குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய 5 டிரைவர்களுக்கு அபராதம்
கடலூரில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய 5 டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து போலீசார் கடந்த சில நாட்களாக தீவிர சோதனை நடத்தி, குடிபோதையில் வாகனம் ஓட்டி வரும் பஸ், லாரி, ஆட்டோ டிரைவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மாநகரில் நேற்று மஞ்சக்குப்பம் மற்றும் உழவர் சந்தை அருகில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோக்களை வழிமறித்து, டிரைவர்களிடம் மதுகுடித்துள்ளதை கண்டறியும் கருவி மூலம் சோதனை நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் சோதனை நடத்தியதில், 5 பேர் மதுகுடித்துவிட்டு ஆட்டோக்களை இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் உரிய ஆவணம் இன்றி இயக்கப்பட்ட 3 ஆட்டோக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.