5 போலி டாக்டர்கள் கைது


5 போலி டாக்டர்கள் கைது
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

பிரம்மதேசம்:

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் அடுத்த ஞானபுரம் கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மரியன் சூசை மகன் மரிய பிரான்சிஸ் (வயது 74). இவரது மகள் சோபியா, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பிரம்மதேசத்தில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். மரிய பிரான்சிஸ் டிப்ளமோ டென்டல் டெக்னீசியன் படித்துவிட்டு இவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மரிய பிரான்சிஸ், அவரது மகள் இல்லாத நேரத்தில் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து மரக்காணம் அரசு மருத்துவமனை மருத்துவர் சுபாஷினி தலைமையிலான மருத்துவக்குழுவினர், பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு துணையுடன் தனியார் பல் மருத்துவமனையில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது, அங்கு மரிய பிரான்சிஸ் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்தது உறுதியானது. இதையடுத்து மரிய பிரான்சிஸ்சை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மருத்துவ பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

கெடார்

கெடார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தேவேந்திர பிரசாத், அதே ஊரில் உள்ள ஒரு மருந்து கடையில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த செஞ்சி தாலுகா கணக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த காத்தவராயன் மகன் பூங்காவனம்(37) என்பரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர், பி.காம் மட்டும் படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இது குறித்து டாக்டர் தேவேந்திர பிரசாத் கெடார் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூங்காவனத்தை கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய ஆங்கில மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கச்சிராயப்பாளையம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே மாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள ஒரு மருந்தகத்தில் வட்டார மருத்துவர் பாலதண்டபாணி தலைமையில் சுகாதாரத்துறையினர் மற்றும் கச்சிராயப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தனிப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் விஜய் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அந்த மருந்தகத்தை நடத்தி வந்த விஜய் (27) என்பவர் மருத்துவ படிப்பு படிக்காமலே பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் எடுத்தவாய்நத்தத்தில் மருந்தகம் நடத்தி வந்த ரகுமான் (52) என்பவரும் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்து தெரிந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரகுமானின் மருந்தகத்துக்கு சுகாதார துறையினர் சீல் வைத்தனர்.

உளுந்தூர்பேட்டை

திருநாவலூர் வட்டார மருத்துவ அலுவலர் செல்வி தலைமையிலான அதிகாரிகள் நடத்திய சோதனையில் உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் பகுதியில் களத்தூர் கிராமத்தை சேர்ந்த கிருபாநிதி (36) என்பவர் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை திருநாவலூர் போலீசார் கைது செய்தனர்.


Next Story