குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு


குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
x

பள்ளிபாளையம் அருகே மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்

பள்ளிபாளையம்

மூதாட்டி கொலை

பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் பில்லுமடை காடு பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 65). இவருடைய கணவர் சின்னசாமி இறந்துவிட்டார். இவர்களுடைய மகன் முனிராஜ் (42). மூதாட்டி பழனியம்மாள் அதே பகுதியில் தனது விவசாய நிலத்தில் குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் மூதாட்டி பழனியம்மாள் தலையில் அடிபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி, நாமக்கல் கூடுதல் துணை சூப்பிரண்டு ராஜூ ஆகியோர் மூதாட்டி கொலை நடந்த இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். பின்னர் போலீசார் பழனியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

5 தனிப்படைகள்

இந்த கொலை தொடர்பாக திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி கூறுகையில், எனது தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மூதாட்டி கொலை தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியை சேர்ந்த மூதாட்டி பாவாயம்மாள் கரும்பு தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இந்த 2 கொலை வழக்கிலும் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் மூதாட்டி பழனியம்மாள் கொலை வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகரன் மற்றும் நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள், விரைவில் கொலையாளிகளை பிடிக்க வேண்டும் என தனிப்படை போலீசார்ிடம் கூறினர்.


Next Story