5 கிலோ கஞ்சா பறிமுதல்
சீர்காழியில் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சிறுவர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழியில் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சிறுவர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருவெண்காடு, உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் செய்தனர். நேற்று மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில் சீர்காழி போலீசார் சீர்காழி புறவழிச் சாலையில் விடிய, விடிய வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சிதம்பரத்தில் இருந்து சீர்காழி நோக்கி வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையில் காரில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் காரில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
கஞ்சா கடத்தல்
விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பள்ளிபடை பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மனோஜ் (வயது 25) என்பதும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து மனோஜை, சீர்காழி போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் படி சீர்காழி அருகே புத்தூர் மேல தெருவை சேர்ந்த சேகர் மகன் வினோத் (20), சீர்காழி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த பொற்செழியன் மகன் தேவேந்திரன் ( 24), சீர்காழி கோவில் பத்து தொன்னலக்குடி மெயின் ரோட்டை சேர்ந்த தியாகராஜன் மகன் ராஜா(37), சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் கீழத்தெருவை சேர்ந்த சுகுமார் மகன் அபினாஷ் (20), வைத்தீஸ்வரன் கோவில் தச்சர் தெருவை சேர்ந்த குமார் மகன் ஆதி கேசவன் (27) மற்றும் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு நிஷா சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து கஞ்சாவை கடத்தி வந்தவர்களை கைது செய்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரனை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.