வெவ்வேறு சம்பவங்களில் ரூ.5½ லட்சம் மோசடி; 5 பேர் மீது வழக்கு
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் ரூ.5½ லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் ரூ.5½ லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெண்ணிடம் பணம் மோசடி
திருமங்கலம் சாத்தங்குடியை சேர்ந்தவர் உதயபாண்டி. இவரது மனைவி காயத்ரி (வயது29). சம்பவத்தன்று செல்போன் மூலம் இவரிடம் பேசிய மர்ம நபர் ரூ.10 லட்சம் கடன் வாங்கித்தருவதாக கூறியுள்ளார். அதற்கு ரூ.3 லட்சம் தர வேண்டும் என அந்த நபர் தெரிவித்துள்ளார். இதை நம்பிய காயத்ரி சம்பவத்தன்று மாட்டுத் தாவணி அருகே வந்தார். அங்கிருந்த சரவணன், செல்வம் உள்ளிட்ட சிலரிடம் ரூ.3 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது.
பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த காயத்ரி செல்போனில் பேசிய நபருடன் பேச முயன்றார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காயத்ரி புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
கோவை சூலூர் தாலுகா அரசூரை சேர்ந்தவர் ராமசாமி(43). இவரிடம் மதுரை வில்லாபுரம் வேலுப்பிள்ளை தெருவை சேர்ந்த ராஜா என்பவர் நண்பராக அறிமுகமானார். அவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ராமசாமியிடம் கூறியுள்ளார். அதற்கு பணம் செலவாகும் என்று தெரிவித்தார். அவர் தெரிவித்தப்படி ராமசாமி ரூ.4 லட்சத்து 95 ஆயிரத்தை ராஜாவிடம் வழங்கினார். அப்போது வெங்கடேசன் என்பவரும் அவருடன் இருந்தார். ஆனால் அவர் தெரிவித்தப்படி வேலை வாங்கி தரவில்லையாம். எனவே ராமசாமி தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு ராஜா ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்தை கொடுத்துள்ளார். மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம். இது குறித்து அவர் அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜா, வெங்கடேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறர்கள்.