தீபாவளி பண்டிகை: சென்னையிலிருந்து 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை மற்றும் அதனை சுற்றி வசித்து வரும் வெளியூர்வாசிகள் பெரும்பாலானோர் பண்டிகைகளை தங்களது சொந்த ஊர்களில் குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.
அந்தவகையில், தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட நேற்று மாலையில் இருந்தே சென்னையில் இருந்து, ரெயில்கள், ஆம்னி பஸ்கள், அரசு பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள், விமானங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சாரை, சாரையாக படையெடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் இன்று மாலை நிலவரப்படி, சென்னையில் இருந்து 4 ஆயிரத்து 772 அரசு பஸ்களில் 2.43 லட்சம் பேர் பயணம் செய்ததாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதவிர ரெயில்கள், கார்கள், மோட்டார் சைக்கிள், விமானங்களில் என ஒட்டுமொத்தமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.