100 பயனாளிகளுக்கு ரூ.5¾ லட்சம் நலத்திட்ட உதவிகள்
100 பயனாளிகளுக்கு ரூ.5¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர், போரில் ஊனமுற்ற படைவீரரின் மகளுக்கு திருமண மானியம், முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ காரணங்களுக்கான நிதியுதவி, வங்கிக்கடன், தையல் பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் மனைவி, மகள்களுக்கு பயிற்சி சான்றிதழ், தையல் எந்திரம் என 100 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி, ஒய்வுபெற்ற கர்னல் ஞானசேகர், முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குனர் நலன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.