தனியார் விடுதியில் மாணவர்களின் 5 மடிக்கணினிகள் திருட்டு
தனியார் விடுதியில் மாணவர்களின் 5 மடிக்கணினிகள் திருட்டுபோனது.
மணிகண்டம்:
மணிகண்டம் அருகே உள்ள பாத்திமா நகரில் ஒரு தனியார் ஆண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் தங்கி இருந்து அப்பகுதியில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று விடுதிகளில் உள்ள மாணவர்கள் கல்லூரிக்கு சென்று விட்டனர். பின்னர் மாலை விடுதி அறைக்கு வந்து பார்த்தபோது ஒரு அறையின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாணவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த திருவான்மியூரை சேர்ந்த ஆசைத்தம்பி மகன் கார்த்திக்நிவேதன் (வயது 19) மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த யாஸ் சாம்பாதிமுலித், சரண் தேஜ், உட்காஸ் பாண்டே, நியாஸ் சாய்தஸ் ஆகிய மாணவர்களின் மடிக்கணினி திருட்டு போயிருந்தது தெரியவந்தது. அந்த மாணவர்கள் இது குறித்து மணிகண்டம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விடுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு, 5 மடிக்கணினிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.