கைதிகளை கொல்ல முயன்ற சம்பவத்தில் மேலும் 5 பேர் கைது
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளை கொல்ல முயன்ற சம்பவத்தில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளை கொல்ல முயன்ற சம்பவத்தில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதிகளுக்கு சிகிச்சை
திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டியை சேர்ந்தவர் பூண்டு வியாபாரி சின்னத்தம்பி (வயது 35). இவர் முன்விரோதம் காரணமாக குணா என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்தார். இந்நிலையில் குணாவின் நண்பர்கள் சின்னத்தம்பியை கடந்த மார்ச் 1-ந் தேதி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து குணாவின் நண்பர்களான யுவராஜ், விக்னேஸ்வரன், 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
யுவராஜா, விக்னேஸ்வரன் ஆகிய 2 பேரும் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி விருதுநகர் மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் யுவராஜா, விக்னேஸ்வரனுக்கு கையில் காயம் இருந்ததால் இருவரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மார்ச் 22-ந் தேதி சிகிச்சைக்காக 5-வது தளத்தில் பொதுவார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
தனிப்படை அமைப்பு
இவர்களுக்கு திண்டுக்கல் ஆயுதப்படை போலீசார் சிலம்பரசன், அழகுராஜா ஆகியோர் பாதுகாப்புக்கு இருந்தனர். கடந்த ஏப்ரல் 18-ந் தேதி 8 பேர் கொண்ட கும்பல் 2 கார்களில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தது. இதில் 6 பேர் திடீரென அரசு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து பாதுகாப்புக்கு இருந்த போலீசார் மீது மிளகாய் பொடியை தூவி விட்டு யுவராஜ் மற்றும் விக்னேஸ்வரனை அரிவாளால் வெட்டி ெகால்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்த நிலையில் யுவராஜுக்கு மட்டும் வெட்டு விழுந்தது. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
இதுதொடர்பாக விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் நிர்வாகம் இவ்வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்தது.
மேலும் 5 பேர் கைது
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ஏற்கனவே 4 பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தற்போது திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த் (35), ராமச்சந்திரன் (36), சிலம்பரசன் (37), திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த விஜய் என்ற விஜி (25), அருண் குமார் என்ற அருண் (23) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.