தம்பதியை தாக்கி நகை, பணம் திருடிய 5 பேர் கைது
ஆவுடையார் கோவில் அருகே தம்பதியை தாக்கி நகை, பணம் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவுடையார் கோவில் அருகே உள்ள ஆலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருள் வேதமாணிக்கம் (வயது 62). இவருடைய மனைவி ஏஞ்சல் மேரி (50). கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி தம்பதியினர் தங்கள் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது மர்ம ஆசாமிகள் அவர்களது வீட்டின் கதவை தட்டினார்கள். இதையடுத்து, அருள் வேதமாணிக்கம் கதவை திறந்தபோது மர்ம ஆசாமிகள் சுத்தியலால் தம்பதியை தாக்கி அவர்களிடமிருந்து நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கோட்டைப்பட்டினம் ஓடாவிமடம் பகுதியை சேர்ந்த பாபு (28), புதுமாரியம்மன் கோவில் தெருவை ேசர்ந்த பிரகாஷ் (21), சித்திரவிடங்கம் பகுதியை சேர்ந்த தினேஷ் (20), தாழனூர் பாரதி நகரை சேர்ந்த அஜித்குமார் (20), ஆலமங்கலத்தை சேர்ந்த தினேஷ் (16) ஆகிய 5 பேரையும் கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.