வேனில் ஆடுகள் திருடிய 5 பேர் கைது
ஏத்தாப்பூர் அருகே வேனில் ஆடுகள் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்
பெத்தநாயக்கன்பாளையம்:-
ஏத்தாப்பூர் அருகே வேனில் ஆடுகள் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசி்ல் ஒப்படைத்தனர்.
ஆடுகள் திருட்டு
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஊத்துமேடு, பாலண்டியூர், படுவக்காடு, இளங்கோ நகர், காராமணி திட்டு, படையாட்சியூர், கரடிப்பட்டு, வைத்தியகவுண்டன் புதூர், புத்திரகவுண்டன்பாளையம், மணக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாக இரவு நேரங்களில் ஆடு, மாடுகள் அதிகளவில் திருட்டு போனது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் காலை ஊத்துமேடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு வேன் வேகமாக சென்றது. இதை அறிந்த அப்பகுதி வாலிபர்கள் பின்தொடர்ந்து சென்று பிடித்தனர். பின்னர் டிரைவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அந்த வேனில் பார்த்தபோது அதில் திருடப்பட்ட ஆடுகள் இருந்தது. இதனையடுத்து ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டு டிரைவருக்கு தர்மஅடி கொடுத்தனர்.
கைது
மேலும் டிரைவருடன் 4 பேர் திருட வந்தது தெரிந்தது. இதையடுத்து 4 பேரையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் ஓலப்பாடி பகுதியை சேர்ந்த கூத்தான், ஊத்துமேடு பகுதியை சேர்ந்த முத்து மகன் சுப்ரமணி, கலியன் மகன் பூமாலை, தர்மலிங்கம் மகன் குமரேசன் என்பது தெரியவந்தது. இவர்களின் தலைவனாக ஊத்துமேடு பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் முனியப்பன் இருந்து வந்தார்.
மேலும் பிடிபட்ட 4 பேருக்கும் கிராம மக்கள் தர்மஅடி கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற ஏத்தாப்பூர் போலீசார் 5 பேரையும் மீட்டனர். அந்த சமயம் கும்பல் தலைவன் முனியப்பன் சிக்கும் வரை 5 பேரை அனுப்ப முடியாது என்று கூறி போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆடு திருடிய கும்பலை பொதுமக்களே மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.