கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி செய்ய முயன்ற 5 பேர் கைது
கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி செய்ய முயன்ற 5 பேர் கைது
தஞ்சையில், தனியார் நிதி நிறுவனத்தில் கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி செய்ய முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கவரிங் நகைகள்
தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. சம்பவத்தன்று இந்த நிதி நிறுவனத்திற்கு 5 பேர் வந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த 205 கிராம் கொண்ட 25 வளையல்களை காண்பித்து, அது தங்க நகைகள் என கூறி அவற்றை அடகு வைத்து, ரூ.7 லட்சம் கேட்டுள்ளனர்.
அந்த 5 பேரின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், நிதி நிறுவனத்தின் மேலாளர் இலக்கியா, வளையல்களை சோதனை செய்துள்ளார். அப்போது அந்த நபர்கள் கொண்டு வந்தது கவரிங் வளையல்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து இலக்கியா தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
5 பேர் கைது
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ரவிமதி மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த 5 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சை கலைஞர் நகரை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 35), விளார் சாலை அன்னை இந்திரா நகரை சோ்ந்த ஜான் பீட்டர்(33), தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த முகமது பிலால்(46), நெல்லை மாவட்டம் பொட்டல் புதூர் பகுதியை சேர்ந்த நாகூர் மீரான்(47), கேரள மாநிலம் திருவனந்த புரம் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான்(42) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
தனியார் நிதி நிறுவனத்தில் கவரிங் வளையல்களை அடகு வைத்து மோசடி செய்ய முயன்றதாக நிறுவன மேலாளர் இலக்கியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரன், ஜான் பீட்டர், முகமது பிலால், நாகூர் மீரான், அப்துல் ரகுமான் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.