கொலை, கொலை முயற்சி வழக்கில் கைதான 5பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
முள்ளக்காடு, முறப்பநாடு பகுதியில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
முள்ளக்காடு, முறப்பநாடு பகுதியில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கொலை
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கக்கன்ஜி நகரை சேர்ந்த குருசாமி மகன் ஆறுமுகசாமி (வயது 26), முத்து மகன் இசக்கிமணி என்ற விஜிக்குட்டி (22), தேவிநகரை சேர்ந்த கணேசன் மகன் மகேஷ்குமார் (22) ஆகிய 3 பேரையும் முத்தையாபுரம் போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர். இதே போன்று முறப்பநாடு படுகையூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகன் என்ற படுகையூர் முருகன் என்ற வங்கு முருகன் (27) என்பவரை முறப்பநாடு போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். ஏரல் பழைய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த வீரதுரை மகன் தண்டபாணி (20) என்பவரை ஏரல் போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ஆறுமுகசாமி, இசக்கிமணி என்ற விஜிக்குட்டி, மகேஷ்குமார், முருகன் என்ற படுகையூர் முருகன் என்ற வங்கு முருகன், தண்டபாணி ஆகிய 5 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 12 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 37 பேர் உட்பட 184 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.