வாலிபர் கொலையில் 5 பேர் கைது-பரபரப்பு தகவல்கள்


வாலிபர் கொலையில் 5 பேர் கைது-பரபரப்பு தகவல்கள்
x

தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி கொலை

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் சரவணகுமார் (வயது 29). இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பெயின்டரான சரவணகுமார் தாளமுத்துநகர் அருகே பூபாண்டியாபுரத்தில் வசித்து வந்தார். அங்கு ஒரு கும்பலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடும்பத்துடன் பிரையண்ட் நகர் 6-வது தெருவில் வந்து குடியேறினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது உறவினரை பஸ் ஏற்றி விடுவதற்காக சரவணகுமார் தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு 3 மோட்டார்சைக்கிள்களில் 5 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்கள் சரவணகுமாரிடம் பேசிக்கொண்டு இருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த அந்த கும்பல் சரவணகுமாரை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பஸ்நிலையத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டதை அறிந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

தனிப்படை

தகவல் அறிந்து வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரவணகுமார் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரபிசுஜின் ஜோஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜன், ஞானராஜன், ஏட்டுகள் முத்துப்பாண்டி, மாணிக்கராஜ், மகாலிங்கம், திருமணி, செந்தில் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி 2 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கொலை செய்யப்பட்ட சரவணகுமாரின் நண்பர் தாளமுத்து நகரை சேர்ந்த ராஜாமணிக்கும், மேற்கு காமராஜர் நகரை சேர்ந்த கந்தையா மகன் மனோவாரோஸ் (26) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் ராஜாமணி அவரது நண்பரான சரவணகுமாருடன் சேர்ந்து தன்னை கொலை செய்து விடக்கூடும் என மனோவாரோஸ் கருதியுள்ளார். இதனால் தான் முந்திக்கொண்டு ராஜாமணியை கொன்று விட வேண்டும் என மனோவாரோஸ் கூட்டாளிகளுடன் அவரை தேடி உள்ளார். ஆனால் ராஜாமணியின் தந்தை கடந்த 3 நாட்களுக்கு முன் இறந்து விட்டதால் அவர், வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் ராஜாமணியின் நண்பரான சரவணகுமாரை பஸ்நிலையத்தில் பார்த்ததும் மனோவாரோஸ் கும்பல் அவரிடம் தகராறு செய்து கொலை செய்தது தெரிய வந்தது.

5 பேர் கைது

இதையடுத்து 2 சிறுவர்களையும் கைது செய்த தனிப்படை போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மனோவாரோஸ் மற்றும் அவரது நண்பர்களான சோட்டையன் தோப்பைச் சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி பொன்ராஜ் மகன் துரைச்சாமி (26), தாளமுத்துநகர் கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்தனர். கைதான 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பஸ்நிலையத்தில் வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story