தொழிலாளி கொலையில் 5 பேர் கைது
சாயல்குடி அருகே தொழிலாளியை அடித்துக் கொன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாயல்குடி,
சாயல்குடி அருகே தொழிலாளியை அடித்துக் கொன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளி அடித்துக்கொலை
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜலாலுதீன் (வயது 46). தொழிலாளி. இவர் தற்போது சாயல்குடி அருகே உள்ள மாரியூர் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை ஜலாலுதீன் மற்றும் ஒப்பிலான் கிராமத்தை சேர்ந்த சீனி முகம்மது நிலவுதீன் (25), நிஷார் (28), ரசாலி (27),அஜ்மீர் கான் (25), நூர்லின் (30) ஆகியோருடன் ஒப்பிலான் கிராம பகுதியில் மது அருந்தியதாக தெரிகிறது. வெளிநாடு செல்வதற்கு முன் ஜலாலுதீன், ஒப்பிலான் கிராமத்தைச் சேர்ந்த நிஷார் என்பவரிடம் தனது ஆட்டை விற்றுள்ளார். மது அருந்தும் போது அதற்கான பணத்தை அவர் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கிராமத்தைச் சேர்ந்த 5 பேரும் கம்பியால் ஜலாலுதீனை தாக்கியுள்ளனர்.
பின்னர் அவரை மீட்டு சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
உடலை வாங்க மறுத்து போராட்டம்
அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஜலாலுதீன் இறந்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக ஜலாலுதீன் மனைவி நூர்நிஷா (38) கொடுத்த புகாரின் பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, அவரது உடலை கைப்பற்றி கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் அவரது உறவினர்கள் ஜலாலுதீனை அடித்து கொலை செய்தவர்களை கைது செய்யக்ேகாரி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கீழக்கரை துணை சூப்பிரண்டு சுதிர்லால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இருப்பினும் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக சீனி முகம்மது நிலவுதீன், நிஷார், ரசாலி, அஜ்மீர் கான், நூர்லின் ஆகிய 5 பேைர கைது செய்தனர். கைதானவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதை தொடர்ந்து ஜலாலுதீன் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.