மதுபானம் கடத்திய 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது
மதுபானம் கடத்திய 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது
நாகை, நாகூரில் மதுபானம் கடத்திய 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 4 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சோதனை
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து நாகைக்கு மதுபானம் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகூர் வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது 2 மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்களை மறித்து சோதனை செய்தபோது, பைகளில் 700 மதுபாட்டில்கள், 70 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
4 பேர் கைது
பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நாகை நல்லியான் தோட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது58), அதே பகுதியை சேர்ந்த சிந்தாமணி (62), சுந்தரம்பாள் (63), செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் (65) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மோட்டார்சைக்கிள் மற்றும் மதுபாட்டில்கள், சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நாகூர்
நாகூர் மேலவாஞ்சூர்-திட்டச்சேரி சாலையில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காரைக்காலில் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் 2 பேர் வந்தனர்.
போலீசாரை பார்த்ததும் ஓருவர் மோட்டார்சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் தப்ப முயன்ற போது அவரை போலீசார் பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் 700 மதுபாட்டில்கள், மற்றும் 110 லிட்டர் பாக்கெட் சாராயம் இருந்தது தெரியவந்தது.
மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மேலவாஞ்சூர்
காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (42) என்பதும், சாராயத்தை கடத்திய வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து, அவரிடம் இருந்த 700 மதுபாட்டில்கள், 110 லிட்டர் பாக்கெட் சாராயம், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.