பொறுப்பாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம்
அரிசி மூட்டைகள் மாயமானதையடுத்து நுகர்பொருள் வாணி கிடங்கு பொறுப்பாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பழனியில், திண்டுக்கல் சாலையில் நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது. இங்கிருந்து பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் திண்டுக்கல் மண்டல மேலாளர் மெர்லின் தலைமையிலான அதிகாரிகள், பழனி கிடங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள அரிசி உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களை சரிபார்த்தனர். அப்போது கிடங்கில் இருந்து டன் கணக்கில் அரிசி மூட்டைகள் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கிடங்கு பொறுப்பாளர் தர்மராஜ் மற்றும் பணியாளர்கள் ஜெய்சங்கர், ரங்கசாமி, ஆறுமுகம், உலகநாதன் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து மண்டல மேலாளர் உத்தரவிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் கூறும்போது, அரிசி மூட்டைகள் மாயமானது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. விசாரணையின் முடிவில் தான் எத்தனை மூட்டைகள் மாயமானது என்பது தெரியவரும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.