கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் பணம் பறித்த 5 பேர் கைது
கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் பணம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி பீமநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 22). இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று திருச்சி பீமநகர் திரிபுர மாரியம்மன் கோவில் அருகே இவர் காய்கறி விற்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி சதீஷ்குமாரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திருச்சி பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த மணிகண்டன் (24), திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த பாரதிதாசன், திருச்சி பீமநகர் கூனி பஜார் பகுதியை சேர்ந்த வீரமணி (33) மற்றும் கிஷோர் கண்ணன் (24) ஆகியோர் சதீஷ்குமாரை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேர் மீது பாலக்கரை, அரியமங்கலம், கண்டோன்மெண்ட், காந்திமார்க்கெட் மற்றும் கோட்டை போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல், திருச்சி பிள்ளைமா நகரை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (32) காந்திமார்க்கெட் பகுதியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 பறித்து சென்றதாக திருச்சி வரகனேரி பென்சியோனர் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் (24) என்பவரை காந்திமார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.