ஜீயபுரம் அருகே நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 பேர் கைது
ஜீயபுரம் அருகே நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜீயபுரம் அருகே நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
திருச்சியை அடுத்த ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜீயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்செந்துரை பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஆட்டோ ஒன்று, பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி விடாமல் வேகமாக வந்தது. இதனை கண்ட போலீசார் அந்த ஆட்டோவை நிறுத்தி ஆட்டோவில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே ஆட்டோவை சோதனை செய்தனர். சோதனையில் ஆட்டோவில் அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்து இருந்தனர். விசாரணையில் அவர்கள் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களை எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஜீயபுரம் போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
5 பேர் கைது
விசாரணையில், அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்த மோகன் மகன் மாதவன்(வயது 22), ரெயில் நிலைய சாலையை சேர்ந்த தங்கராஜ் மகன் வசந்தகுமார்(25), ஆர்.எஸ். ரோடு காவடிகாரதெருவை சேர்ந்த சார்லஸ் மகன் அஜித்குமார்(25), கீழவாசலை சேர்ந்த சிதம்பரம் மகன் மகேஷ்யாதவ்(28), ஆர்.எஸ்.ரோட்டை சேர்ந்த மோகன் மகன் சத்யராஜ்(38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.