செல்லூர் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது
செல்லூர் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரையில் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் செல்லூர் கண்மாய்க்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மரக்கடை அருகே 5 பேர் கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள், செல்லூர், கள்ளுக்கடை சந்து சேதுராமன் என்ற ஏட்டையா (வயது 27), செல்லூர் வள்ளுவர் தெரு தங்கபாண்டி (19), பாக்கியநாதபுரம் நாராயணகுரு தெரு பால்ராஜ் (32), செல்லூர் நந்தவனம் சூரியபிரகாஷ் (19), அய்யனார் கோவில் தெரு ராஜவேல் (21) என்பதும், அவர்கள் பெரிய கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் வைத்திருப்பதும் தெரியவந்தது. பின்னர் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.